தமிழ்

இயேசு கண்ணீர் விட்டு அழுதார்

நவம்பர் 17, 2022
பொதுக்காலத்தின் முப்பத்து மூன்றாம் வாரம் வியாழன்
இன்றைய வாசகங்கள்

ஹங்கேரி நாட்டுப் புனித எலிசபெத், துறவியார்—நினைவு

காணொளி

இயேசு எருசலேமை நெருங்கி வந்தபோது, நகரைக் கண்டு அதற்காகக் கண்ணீர் விட்டு அழுது, “அமைதிக்கு வழிவகுப்பது எது என்பதை இன்றாவது நீ அறிந்திருக்கக் கூடாதா! ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது” என்றார்.  லூக்கா 19:41-42

எருசலேம் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி இயேசு துல்லியமாக என்ன அறிந்திருந்தார் என்பதை அறிவது கடினம்.  ஆனால், அவர் அறிந்திருந்தது அவரைத் துயரத்தில் கண்ணீர் சிந்த வைத்தது என்பதை இந்தப் பகுதியிலிருந்து நாம் அறிகிறோம்.  தியானிப்பதற்குச் சில கருத்துகள் இங்கே தரப்பட்டுள்ளன.

முதலில், இயேசு கண்ணீர் விட்டு அழும் காட்சியைக் காண்பது முக்கியம்.  இயேசு அழுதார் என்று சொல்வது, அது வெறும் சிறிய வருத்தமோ ஏமாற்றமோ அல்ல என்பதை உணர்த்துகிறது.  மாறாக, உண்மையாகவே கண்ணீர் சிந்தும் அளவுக்கு அவரை நெகிழச் செய்த மிக ஆழ்ந்த துயரத்தை அது உணர்த்துகிறது.  எனவே, அந்தக் காட்சியிலிருந்து தொடங்கி, அது உங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதியட்டும்.

இரண்டாவதாக, இயேசு எருசலேமுக்காகக் கண்ணீர் விட்டு அழுதார். ஏனெனில், அவர் நகரை நெருங்கி, அதைத் தெளிவாகக் கண்டபோது, ஏராளமான மக்கள் தம்மையும் தமது வருகையையும் புறக்கணிப்பார்கள் என்பதை உடனே உணர்ந்தார்.  நிலைவாழ்வின் மீட்புக் கொடையை அவர்களுக்கு வழங்கவே அவர் வந்தார். வருத்தத்திற்குரிய வகையில், சிலர் அக்கறையின்மையால் இயேசுவைப் பொருட்படுத்தவில்லை; மற்றவர்களோ அவர்மீது கடும் சினம்கொண்டு அவரைக் கொல்ல முயன்றனர்.

மூன்றாவதாக, இயேசு எருசலேமுக்காக மட்டுமே கண்ணீர் விட்டு அழவில்லை.  எல்லா மக்களுக்காகவும், குறிப்பாக, எதிர்காலத்தில் தமது விசுவாசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கப்போகிறவர்களுக்காகவும் அவர் அழுதார்.  பலரிடம் விசுவாசம் குறைவாக இருக்கும் என்பதை அவர் முன்னரே கண்டார்; குறிப்பாக அதற்காகவே அவர் அழுதார்.  இயேசு இந்த உண்மையைத் தெளிவாக அறிந்திருந்தார்; அது அவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.

கிறிஸ்துவைப் பற்றி அக்கறையின்றி இருக்கும் கடுமையான சோதனையை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம்; அதைப் பற்றி இன்று சிந்தியுங்கள்.  சிறிதளவு விசுவாசம் கொண்டிருப்பதும், நமக்கு நன்மை கிடைக்கும்போது கடவுளை நாடுவதும் நமக்கு எளிது.  ஆனால், வாழ்வில் எல்லாம் நன்றாகச் செல்வதுபோல் தோன்றும்போது கிறிஸ்துவைப் பற்றி அக்கறையின்றி இருப்பதும் மிகவும் எளிது.  ஒவ்வொரு நாளும் இயன்றவரை முழுமையாக அவரிடம் நம்மை ஒப்படைக்க வேண்டியதில்லை என்று எண்ணும் வலையில் நாம் எளிதில் விழுந்துவிடுகிறோம்.  கிறிஸ்துவைப் பற்றிய அக்கறையின்மை எதுவாயினும் அதை இன்று வேரோடு அகற்றுங்கள். உங்கள் முழு இதயத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து, அவருடைய திருவுளத்தை நிறைவேற்ற விரும்புவதாக அவரிடம் சொல்லுங்கள்.

ஆண்டவரே, என் இதயத்தில் உள்ள அலட்சியத்தின் ஒவ்வொரு சுவட்டையும் வேரோடு அகற்றுமாறு உம்மை மன்றாடுகிறேன்.  என் பாவத்திற்காக நீர் கண்ணீர் சிந்தும்போது, அந்தக் கண்ணீர் என்னைக் கழுவித் தூய்மையாக்கட்டும்; அப்போது என் தெய்வீக ஆண்டவரும் அரசருமாகிய உமக்கு என்னை முழுமையாக அர்ப்பணிக்க இயலும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

கிறிஸ்து அரசர் நவநாள் செபம்
மரபுப்படி கிறிஸ்து அரசர் பெருவிழாவிற்கு முந்தைய ஒன்பது நாட்கள்
நவம்பர் 11–19 வரை நாள்தோறும் செபிக்கப்படும் நவநாள் செபம்

எங்கள் கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்திப் பாருங்கள்!

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – ஹங்கேரி நாட்டுப் புனித எலிசபெத், துறவியார்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: ஜேம்ஸ் திசோ வரைந்த ‘இயேசு கண்ணீர் விட்டார்’, Wikimedia Commons வழியாக