தமிழ்

நம்மைச் சுற்றிலும் கிறிஸ்து

பிப்ரவரி 1, 2023
பொதுக்காலம் நான்காம் வாரம் புதன்கிழமை
இன்றைய வாசகங்கள்

காணொளி

“இவர் தச்சர் அல்லவா? மரியாவின் மகனும் யாக்கோபு, யோசேப்பு, யூதா, சீமோன் ஆகியோரின் சகோதரரும் அல்லவா? இவருடைய சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” இவ்வாறு அவர்கள் அவரைக் குறித்து இடறலடைந்தனர். மாற்கு 6:3

நாட்டுப்புறமெங்கும் பயணம் செய்து, புதுமைகள் நிகழ்த்தி, மக்கள் கூட்டத்திற்குக் கற்பித்து, தம்மைப் பின்பற்றுவோர் பலரைப் பெற்ற இயேசு, தாம் வளர்ந்த நாசரேத்துக்குத் திரும்பினார். இயேசுவின் புதுமைகள் பற்றியும் அதிகாரமிக்க போதனைகள் பற்றியும் பல செய்திகளைக் கேள்விப்பட்டிருந்த அவரது சொந்த ஊர் மக்கள், அவரை மீண்டும் காண்பதில் பெருமகிழ்ச்சி அடைவார்கள் என்று எண்ணி, அவருடன் அவரது சொந்த ஊருக்குத் திரும்புவதில் சீடர்கள் உற்சாகமாக இருந்திருக்கலாம். ஆனால், விரைவிலேயே சீடர்களுக்குப் பெரும் வியப்பு காத்திருந்தது.

நாசரேத்துக்கு வந்தபின், இயேசு கற்பிப்பதற்காகத் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கிருந்த மக்களைத் திகைக்கச் செய்யும் அதிகாரத்தோடும் ஞானத்தோடும் அவர் கற்பித்தார். அவர்கள் தங்களுக்குள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஞானம் எத்தகையது?” என்று பேசிக்கொண்டனர். இயேசுவை அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் அவர்கள் குழப்பமடைந்தனர். அவர் அவ்வூர்த் தச்சர்; தச்சரான தம் தந்தையுடன் பல ஆண்டுகளாக வேலை செய்தவர். அவர் மரியாவின் மகன்; அவரது மற்ற உறவினர்களையும் அவர்கள் பெயர் சொல்லி அறிந்திருந்தனர்.

இயேசுவின் ஊர் மக்களுக்கு இருந்த முதன்மையான இடையூறு, அவரை நன்கு அறிந்திருந்ததே. அவர்களுக்கு அவரைத் தெரியும். அவர் எங்கு வாழ்ந்தார் என்பது தெரியும். அவர் வளர்ந்து வந்த காலத்திலிருந்தே அவரைத் தெரியும். அவரது குடும்பத்தைத் தெரியும். அவரைப் பற்றிய அனைத்தும் அவர்களுக்குத் தெரியும். எனவே, இயேசு எப்படி சிறப்பான ஒருவராக இருக்க முடியும் என்று அவர்கள் வியந்தனர். இப்போது அவரால் எப்படி அதிகாரத்துடன் கற்பிக்க முடிகிறது? இப்போது அவரால் எப்படிப் புதுமைகள் செய்ய முடிகிறது? இவ்வாறு, ஊர் மக்கள் வியப்படைந்தனர்; அந்த வியப்பு சந்தேகமாகவும், தீர்ப்பிடுதலாகவும், குறைகூறுதலாகவும் மாறுவதற்கு அவர்கள் இடமளித்தனர்.

நாம் உணர்வதைவிட அதிகமாகவே இதே சோதனையை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம். நமக்கு நன்கு தெரிந்த ஒருவரைப் பாராட்டுவதைவிட, அறிமுகமில்லாத ஒருவரைத் தொலைவிலிருந்து பாராட்டுவது பெரும்பாலும் எளிதாக இருக்கிறது. பாராட்டத்தக்க ஒன்றைச் செய்துகொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி முதன்முறையாகக் கேள்விப்படும்போது, மற்றவர்களுடன் சேர்ந்து அவரைப் பாராட்டுவது எளிது. ஆனால் நமக்கு நன்கு தெரிந்த ஒருவரைப் பற்றிய நல்ல செய்தியைக் கேட்கும்போது, பொறாமை அல்லது பிறருடைய நன்மையைக் கண்டு மனம் புழுங்குதல், சந்தேகப்படுதல், குறைகூறுதலும்கூட நம்மை எளிதில் சோதிக்கலாம். ஆனால் ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு குடும்பம் உண்டு என்பதே உண்மை. மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும், கடவுள் யார் வழியாகப் பெரிய செயல்களைச் செய்யப்போகிறாரோ அத்தகைய சகோதரர்கள், சகோதரிகள், ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள் மற்றும் பிற உறவினர்கள் இருக்கக்கூடும். இது நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடாது; மாறாக, நமக்கு ஊக்கமளிக்க வேண்டும்! நமக்கு நெருக்கமானவர்களையும் நன்கு அறிமுகமானவர்களையும் நம் நல்ல கடவுள் வல்லமையுடன் பயன்படுத்தும்போது நாம் மகிழ வேண்டும்.

இன்று, உங்கள் வாழ்வில் உங்களுக்கு அறிமுகமானவர்களைப் பற்றி, குறிப்பாக உங்கள் சொந்தக் குடும்பத்தினரைப் பற்றிச் சிந்தியுங்கள். வெளித்தோற்றத்தைக் கடந்து பார்த்து, ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் வாழ்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்குச் சிரமம் இருக்கிறதா என்று ஆராய்ந்து பாருங்கள். நம்மைச் சுற்றிலும், குறிப்பாக நமக்கு மிகவும் நன்றாகத் தெரிந்தவர்களின் வாழ்வில் கடவுளின் உடனிருப்பைக் கண்டுணர நாம் இடைவிடாது முயல வேண்டும்.

எப்போதும் உடனிருக்கும் என் ஆண்டவரே, என்னைச் சுற்றியுள்ள அனைவரின் வாழ்விலும் எண்ணற்ற வழிகளில் நீர் உடனிருப்பதற்காக உமக்கு நன்றி. எனக்கு மிக நெருக்கமானவர்களின் வாழ்வில் உம்மைக் காணவும் உம்மை அன்புசெய்யவும் எனக்கு அருள் தாரும். அவர்களின் வாழ்வில் உமது மாட்சிமிகு உடனிருப்பை நான் கண்டுணரும்போது, ஆழ்ந்த நன்றியுணர்வால் என்னை நிரப்பி, அவர்களின் வாழ்விலிருந்து வெளிப்படும் உமது அன்பை ஏற்றுணர எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: தொழுகைக்கூடத்தில் நூற்சுருளை விரிக்கும் இயேசு — ஜேம்ஸ் டிஸ்ஸோ வரைந்தது, விக்கிமீடியா காமன்ஸ் வழியாக