நவம்பர் 29, 2020
திருவருகைக்காலம் முதல் ஞாயிறு (ஆண்டு B)
இன்றைய வாசகங்கள்

“நான் உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்கும் சொல்கிறேன்: ‘விழிப்பாயிருங்கள்!’” மாற்கு 13:37
நீங்கள் கிறிஸ்துவிடம் கவனம் செலுத்துகிறீர்களா? இது ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இருந்தாலும், இதன் பொருள் என்ன என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பலர் இருக்கலாம். ஆம், மேலோட்டமாகப் பார்த்தால் இது தெளிவாகவே உள்ளது: “கவனத்துடன் இருப்பது” என்பது உங்கள் வாழ்விலும் உங்களைச் சுற்றியுள்ள உலகிலும் நம் ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்திருப்பதாகும். அப்படியானால், நீங்கள் கவனத்துடன் இருக்கிறீர்களா? விழிப்புடன் இருக்கிறீர்களா? கிறிஸ்துவின் வருகையை நோக்கி, அவரைத் தேடி, அவருக்காகக் காத்திருந்து, அவரது வருகையை எதிர்பார்த்து, அதற்காக உங்களைத் தயாரித்துக்கொள்கிறீர்களா? இயேசு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிறு குழந்தையின் வடிவில் இவ்வுலகிற்கு வந்திருந்தாலும், இன்றும் அவர் நம்மிடம் தொடர்ந்து வருகிறார். அவரது ஆழ்ந்த உடனிருப்பை நீங்கள் நாள்தோறும் உணராமல் இருந்தால், ஆன்மிக நிலையில் நீங்கள் ஏற்கெனவே ஓரளவு உறக்கத்தில் இருக்கக்கூடும்.
இவ்வுலகின் நிலையற்ற, முக்கியமற்ற, ஏன் பாவமானவற்றின்மீதும் நம் அகக்கண்களைத் திருப்பும்போதெல்லாம், ஆன்மிக நிலையில் நாம் “உறங்கிவிடுகிறோம்.” அவ்வாறு நிகழும்போது, கிறிஸ்துவையே நம்மால் காண முடியாமல் போகிறது. வருத்தத்திற்குரிய வகையில், இவ்வாறு நடப்பது நாளுக்கு நாள் எளிதாகிக்கொண்டே வருகிறது. வன்முறை, நோய், வெறுப்பு, பிளவு, இடறல் விளைவிக்கும் செயல்கள் போன்றவை நாள்தோறும் நம்மை வாட்டுகின்றன. இயன்றவரை மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் செய்திகளை நமக்கு வழங்கச் செய்தி ஊடகங்கள் தினமும் போட்டியிடுகின்றன. நமது குறுகிய நேரக் கவனத்தை, ஒரு கணம் மட்டுமே நிறைவளிக்கும் சிறு ஒலித்துணுக்குகளாலும் படங்களாலும் நிரப்பச் சமூக ஊடகங்கள் தினமும் முயல்கின்றன. இதன் விளைவாக, நம் ஆன்மாவின் கண்களாகிய நமது நம்பிக்கையின் அகப்பார்வை இருளடைகிறது; அது புறக்கணிக்கப்பட்டு, மறக்கப்பட்டு, ஒதுக்கப்படுகிறது. இதனால், இன்று நம் உலகில் பலர், பெருகிவரும் குழப்பமான இரைச்சலைத் தாண்டி, உலக மீட்பரின் மென்மையான, தெளிவான, ஆழ்ந்த குரலை உணர முடியாதவர்களாகத் தோன்றுகின்றனர்.
நாம் திருவருகைக்காலத்தைத் தொடங்கும் இவ்வேளையில், நம் ஆண்டவர் உங்கள் ஆன்மாவின் மிக ஆழமான பகுதியில் உங்களுடன் பேசுகிறார். அவர் மென்மையாக, “விழித்தெழு.” “செவிகொடு.” “விழிப்பாயிரு” என்று கூறுகிறார். அவர் உரக்கக் கத்த மாட்டார்; மெல்லிய குரலில் பேசுவார். எனவே, உங்கள் முழுக் கவனத்தையும் அவருக்குச் செலுத்த வேண்டும். நீங்கள் அவரைக் காண்கிறீர்களா? அவரது குரலைக் கேட்கிறீர்களா? அவருக்குச் செவிகொடுக்கிறீர்களா? அவரைப் புரிந்துகொள்கிறீர்களா? அவரது குரலை நீங்கள் அறிவீர்களா? அல்லது, உங்களைச் சுற்றியுள்ள பல குரல்கள், அவர் உங்களுக்குத் தெரிவிக்க விரும்பும் ஆழமிக்க, உள்ளார்ந்த, வாழ்வை மாற்றும் உண்மைகளிலிருந்து உங்களை விலக்கிச் செல்கின்றனவா?
கடவுள் ஒவ்வொரு நாளும் உங்கள் ஆன்மாவின் ஆழத்தில் பேசுகிறார் என்ற உண்மையை இன்று சிந்தித்துப் பாருங்கள். இப்போதும் அவர் உங்களுடன் பேசுகிறார். அவர் கூறுவதுதான் வாழ்வில் உண்மையாகவே முக்கியமானது. அவருக்குச் செவிகொடுக்கவும், கவனத்துடன் இருக்கவும், பதிலளிக்கவும் நீங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக்கொள்ள, மற்ற எல்லாக் காலங்களையும்விடத் திருவருகைக்காலம் சிறப்பான காலமாகும். உறக்கத்திலேயே இருந்துவிடாதீர்கள். விழித்தெழுந்து, நம் ஆண்டவரின் ஆழ்ந்த குரலுக்கு அக்கறையுடன் கவனம் செலுத்துங்கள்.
ஆண்டவராகிய இயேசுவே, வாரும்! வாரும்! அன்பு ஆண்டவரே, இந்தத் திருவருகைக்காலம் என் வாழ்வில் ஆழ்ந்த புதுப்பித்தலின் காலமாக அமையட்டும். உமது மென்மையான, ஆழ்ந்த குரலைத் தேடிக் கண்டறிய நான் முழு இதயத்தோடும் முயலும் காலமாக இது அமையட்டும். அன்பு ஆண்டவரே, என் கவனத்தைக் கவரப் போட்டியிடும் உலகின் பலவித இரைச்சல்களிலிருந்து விலகி, உம்மிடமும் நீர் கூற விரும்பும் அனைத்தையும் நோக்கியும் மட்டுமே திரும்ப எனக்கு அருள் தாரும். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்; இந்தத் திருவருகைக்காலத்தில் என் வாழ்வினுள் இன்னும் ஆழமாக வாரும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
அமல உற்பவ நவநாள் செபம்
நவம்பர் 29-டிசம்பர் 7
எங்கள் திருவருகைக் கால வளங்களைப் பாருங்கள்!
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்
மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: Pixabay தளத்திலிருந்து Gerd Altmann வழங்கியது
திருவருகைக்காலத்திற்காக ஆயத்தமாகுங்கள்!
திருவருகைக் காலம் மற்றும் கிறிஸ்து பிறப்புக் காலச் சிந்தனைகள்
மென் அட்டைப் புத்தகம் & மின்னூல்
Amazon.com – Google Play – iTunes – Barnes and Noble





