தமிழ்

இயேசுவோடு ஆன்மாக்களுக்காக வலை வீசுதல்

ஏப்ரல் 22, 2022
உயிர்ப்புப் பெருவிழாவின் எண்கிழமையில் வெள்ளிக்கிழமை
இன்றைய வாசகங்கள்

காணொளி

“படகின் வலப்பக்கத்தில் வலையை வீசுங்கள்; உங்களுக்கு ஏதாவது கிடைக்கும்.” அவர்களும் அவ்வாறே வலையை வீசினார்கள். மீன்கள் மிகுதியாக இருந்ததால் அவர்களால் அதை இழுக்க முடியவில்லை.  யோவான் 21:6

மேலுள்ள பகுதியில் இயேசு திருத்தூதர்களுக்கு அளித்த அனுபவத்தைப் பெற ஒவ்வொரு மீனவரும் விரும்புவார்.  திருத்தூதர்கள் இரவு முழுவதும் மீன் பிடித்தும் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.  காலையில் இயேசு கரையில் தோன்றினார்; ஆனால் அவர்தான் என்று அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.  அப்போது படகின் வலப்பக்கத்தில் வலையை வீசும்படி அவர் அவர்களுக்கு ஓர் எளிய கட்டளையைக் கொடுத்தார்.  அவர்களால் இழுக்க முடியாத அளவுக்கு ஏராளமான மீன்கள் வலையில் சிக்கின.  எத்தனை மகிழ்ச்சியூட்டும் மீன்பிடிப்பு!

இவ்வாறு மீன்கள் கிடைத்தது, அவர்களுடைய வேலையில் உதவுவதற்காக இயேசு செய்த ஓர் உதவி மட்டுமல்ல.  அது ஆழமான அடையாளப் பொருளைக் கொண்டிருந்தது.  இயேசு திருத்தூதர்களுக்கு ஒரு புதிய அழைப்பைக் கொடுத்தார் என்பதே அதன் மையமான அடையாளப் பொருள்.  இனி அவர்கள் மீன்களுக்காக மட்டும் வலை வீசப்போவதில்லை; மாறாக, இப்போது அவர்கள் ஆன்மாக்களுக்காக வலை வீச வேண்டியிருந்தது.  இதில் முக்கியமானது என்னவென்றால், அவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் இதைச் செய்ய முயன்றால், வெறுங்கையோடுதான் திரும்புவார்கள்.  ஆனால் ஆண்டவரின் கட்டளைப்படி, அவர் காட்டும் வழியில், அவர் குறித்த நேரத்தில் இதைச் செய்தால், அவர்களுடைய முயற்சிகள் ஏராளமான நற்கனிகளைத் தரும்.  அவர்கள் கற்பனை செய்வதைவிடவும் மிகுதியாகத் தரும்!

உலகிற்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற கட்டளையை இயேசுவின் இந்தப் புதுமை திருத்தூதர்களுக்கு வெளிப்படுத்தத் தொடங்குகிறது; நமக்கும் அவ்வாறே வெளிப்படுத்துகிறது.  இயேசு உயிர்த்தெழுந்தபின், தமது மீட்புப் பணியை நிறைவேற்றுவதற்கான இறுதி அறிவுரைகளைத் திருத்தூதர்களுக்குக் கொடுக்கும்போது இந்த வெளிப்பாடு நிகழ்கிறது.  நற்செய்தியைப் பரப்புவதற்கு நமக்குள்ள அழைப்பை இந்தப் புதுமையில் நாம் காண வேண்டும்.  மேலும், இயேசுவின் கட்டளைப்படி மட்டுமே, அவர் காட்டும் வழியில், அவர் குறித்த நேரத்தில் நற்செய்தியைப் பரப்ப வேண்டும் என்ற கட்டளையையும் இந்தப் புதுமையில் நாம் காண வேண்டும்.

சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் நற்செய்தியைப் பரப்புவதற்குப் பல “நல்ல” யோசனைகளை முன்வைக்க முனைகிறார்கள்.  ஆனால், கடவுளுக்கு முன்பாக நம்மையே தாழ்த்தி, ஆண்டவர் முன்னின்று வழிநடத்தி வழிகாட்டாவிட்டால், நற்செய்தியைப் பரப்ப நம்மால் இயலாது என்பதை உணர்வதுதான் முக்கியம்.  நாம் அவருக்காகக் காத்திருந்து, அவர் பேச இடமளிக்க வேண்டும் என்பதை இது நமக்குச் சொல்கிறது.  நாம் அவரது குரலுக்குச் செவிகொடுத்து, அவர் வழிநடத்தும்போது மட்டுமே செயல்பட வேண்டும்.  நற்செய்தி அறிவித்தல் என்பது நமது சொந்த முயற்சியால் நாம் செய்யும் ஒன்றல்ல; மாறாக, இயேசுவுக்கு நாம் அளிக்கும் பதிலாகும்.  இந்தப் புதுமை நிகழ்வின் மையச் செய்தி இதுவே.

உயிர்ப்புப் பெருவிழாக் கொண்டாட்டத்தை நாம் தொடரும் இவ்வேளையில், நற்செய்தி அறிவிப்பதில் நமக்குள்ள பொறுப்பைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க இது ஒரு நல்ல தருணம்.  இயேசுவின் இந்தப் பணியில் பங்கேற்க நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.  நமது அழைப்புக்கும் பணிக்கும் ஏற்ப, இது நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும்.  ஆனால் உண்மையான கேள்வி இதுதான்: “இயேசு என்னை வழிநடத்தும் விதத்தில் நற்செய்தி அறிவிக்கும்படி அவர் விடுக்கும் அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேனா?”  இது ஒரு முக்கியமான கேள்வி.  இயேசு நமக்குக் கொடுக்கும் குறிப்பிட்ட பணி வேறு யாரிடமும் ஒப்படைக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.  நம்மைப் பயன்படுத்த அவர் உண்மையாகவே விரும்புகிறார்.

நம் ஆண்டவர் திருத்தூதர்களுக்குக் கொடுத்த இந்தக் கட்டளையை இன்று சிந்தித்துப் பாருங்கள். தமது திருவுளத்திற்கேற்ப “ஆன்மாக்களுக்காக வலை வீச” உங்களை அழைத்து, இதே கட்டளையை அவர் உங்களுக்கும் கூறுவதைக் கேளுங்கள்.  இந்த வாரத்தில் ஆண்டவர் உங்களிடம் பேச இடமளியுங்கள்; அவரது வழிகாட்டுதலை ஏற்க உங்கள் உள்ளத்தைத் திறந்து வையுங்கள்.  கடவுள் உங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்; ஆகவே, அதற்கு நீங்கள் இடமளிப்பதை உறுதிசெய்யுங்கள்!

எனக்குக் கட்டளையிடும் என் ஆண்டவரே, நீர் என்னைப் பயன்படுத்த வேண்டும் என உண்மையிலேயே விரும்புகிறேன்.  உமது திருவுளத்தின்படி நற்செய்தியை அறிவிக்க நான் உண்மையிலேயே விரும்புகிறேன்.  உமது அழைப்புக்கு நம்பிக்கையுடன் பதிலளிக்க எனக்கு உதவியருளும்; நீர் தரும் வழிகாட்டுதலுக்கு மனதாரச் செவிசாய்க்கவும் எனக்கு உதவியருளும்.  அன்பு ஆண்டவரே, பல ஆன்மாக்களை மீட்டு உமது அரசில் சேர்க்க என்னைப் பயன்படுத்தியருளும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

எட்டாம் நாள்: இறை இரக்க ஞாயிறுக்கான தயாரிப்பு நவநாள் செபம்

உயிர்ப்புப் பெருவிழாவிற்கான மேலும் சில பதிவுகள்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: அற்புத மீன்பிடிப்பு — வரைந்தவர்: ரஃபேல், விக்கிமீடியா காமன்ஸ் வழியாக


மின்னூலாகவும் மென் அட்டைப் புத்தகமாகவும் கிடைக்கிறது:

Amazon –  Barnes and Noble – Google Play – iTunes

இறை இரக்கம் குறித்த அன்றாடத் தியானங்கள்:
புனித ஃபவுஸ்தீனாவுடன் 365 நாட்கள்


  Subscribe to our YouTube channel  
  to be notified about new content.