தமிழ்

ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்!

ஜூலை 2, 2024
பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க்கிழமை
இன்றைய வாசகங்கள்

காணொளி

இயேசு ஒரு படகில் ஏறியதும், அவருடைய சீடர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். திடீரெனக் கடலில் கடும் புயல் எழுந்தது; அலைகள் படகை மூழ்கடிக்கும் அளவுக்கு மோதின. ஆனால் அவர் உறங்கிக்கொண்டிருந்தார். மத்தேயு 8:23–24

இந்த அனுபவம் சீடர்களின் உள்ளத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒத்தமைவு நற்செய்திகள் மூன்றிலும் இது பதிவாகியிருப்பதே அதற்குச் சான்று. இயேசு புயலை அடக்கியபின் வரும் இந்நிகழ்வின் இறுதி வார்த்தைகளிலும் இதை நாம் காண்கிறோம்: “அவர்கள் வியப்புற்று, ‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகைய மனிதர்?’ என்றனர்.”

மரபுவழியாக, இந்த நிகழ்வு ஒட்டுமொத்தத் திருஅவைக்கும் தனிப்பட்ட ஆன்மாவுக்கும் ஓர் உருவகமாக விளக்கப்பட்டு வந்துள்ளது. படகு திருஅவையின் உருவகம்; அதன் வழியாகவே கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வாழ்வின் ஆபத்துகளைக் கடந்து செல்கிறோம். நாம் தப்பிப் பிழைக்கத் திருஅவையில் நிலைத்திருக்க வேண்டும். படகிலுள்ள ஒவ்வொருவரும் திருஅவையின் உறுப்பினராகிய நம் ஒவ்வொருவரையும் குறிக்கிறார். கடும் புயல், வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல தனிப்பட்ட போராட்டங்களையும், திருஅவை இதுவரை எதிர்கொண்டுள்ளதும் காலத்தின் முடிவுவரை தொடர்ந்து எதிர்கொள்ளப்போவதுமான துன்புறுத்தல்களையும் குறிக்கும் உருவகமாக உள்ளது.

புயல் படகை அலைக்கழித்தபோது, இயேசு உறங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் உறங்கியதற்கு ஒரு காரணம் இருந்தது. மனித வரலாற்றை, குறிப்பாகத் திருஅவையின் வரலாற்றைப் பார்க்கும்போது, குழப்பங்களும் துன்புறுத்தல்களும் இன்னல்களும் எழுந்த பல வேளைகளில், கடவுள் அங்கு இல்லாதவர்போலவோ “உறங்குபவர்போலவோ” தோன்றியிருப்பதைக் காண்கிறோம். அனைவரும் இல்லாவிட்டாலும், பலர் தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு நேரத்தில் இதே அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். இந்தப் புயலை எதிர்கொள்ளும் சீடர்கள், வாழ்வில் நம்பிக்கையிழக்கும் சோதனை நமக்கு ஏற்படும்போது எவ்வாறு செபிக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த வழியைக் காட்டுகிறார்கள். அவர்கள் இயேசுவை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் அழிந்துபோகிறோம்!” என்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையின்மைக்காகவும் அச்சத்திற்காகவும் இயேசு அவர்களைக் கடிந்துகொண்டாலும், அவர்களுடைய மன்றாட்டுகளுக்குப் பதிலளித்துப் புயலையும் அடக்குகிறார்.

இந்தச் சூழலில் சீடர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்கள் நம்பிக்கையுடன் இயேசுவைத் தொடர்ந்து உறங்க விட்டிருக்க வேண்டுமா? நம்பிக்கை குறைந்தவர்களாக இருந்ததற்காக நம் ஆண்டவர் அவர்களைக் கடிந்துகொண்டாலும், நாம் அச்சத்திற்கு ஆளாகும் சோதனை ஏற்படும்போது கடவுள் காட்டும் இரக்கத்தையே இந்த நிகழ்வு முதன்மையாக வெளிப்படுத்துகிறது. சில வேளைகளில் நாம் அனைவரும் நம்மால் சமாளிக்க முடியாதபடி உணர்வோம் என்றும், இவ்வாறு சோதனைக்கு உள்ளாவோம் என்றும் கடவுள் அறிவார். நமது நம்பிக்கை முழுமையானதல்ல என்பதை அவர் அறிவார்; ஆகவேதான், தம் சீடர்கள் நமக்கு இந்த எடுத்துக்காட்டைத் தர அவர் அனுமதித்தார். எனவே, வாழ்வில் நம்மால் சமாளிக்க முடியாதபடி உணர்ந்து அஞ்சும்போதெல்லாம், நம்மைக் காப்பாற்றும்படி அவரை நோக்கிக் கூப்பிட வேண்டும். நாம் அவரிடம் திரும்ப வேண்டுமென்றே அவர் விரும்புகிறார்.

சீடர்களின் இந்தச் செபத்தைக் குறித்து இன்று சிந்தியுங்கள். நீங்கள் ஏதேனும் தனிப்பட்ட நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலோ, இன்னும் தீராத ஒரு பெரிய குடும்பப் பிரச்சினையைச் சந்தித்துக்கொண்டிருந்தாலோ, ஒட்டுமொத்தத் திருஅவையையோ சமூகத்தையோ வாட்டும் பிற போராட்டங்களை மேலும் மேலும் உணர்ந்து வந்தாலோ, சீடர்களின் இந்தச் செபத்தைப் பின்பற்ற முயலுங்கள்: “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் அழிந்துபோகிறோம்!” இந்த வார்த்தைகள் முதலில் நம்பிக்கையிழந்தவர்களின் வார்த்தைகள்போல் தோன்றினாலும், உண்மையில் இவை எதிர்நோக்கும் நம்பிக்கையும் நிறைந்த வார்த்தைகளே. நமது ஆன்மாக்களிலும் குடும்பங்களிலும் திருஅவையிலும் நமது உலகிலும் நாம் தேடும் அமைதியின் ஒரே ஊற்றாக இருப்பவரிடம் இவை நம்மை வழிநடத்துகின்றன. நீங்களும் மற்றவர்களும் “அழிந்துபோகிறோம்” என்ற உணர்வை அனுபவிக்கும் பல்வேறு சூழல்களைக் கண்டுணருங்கள்; உங்களையும் தேவையில் இருக்கும் அனைவரையும் காப்பாற்றும்படி முழு உள்ளத்தோடு நம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

எல்லாம் வல்ல ஆண்டவரே, உமது மக்களை வாட்டும் புயல்களை முற்றிலும் அமைதிப்படுத்தும் உமது தெய்வீக வல்லமையையும் ஆற்றலையும் கண்டு நான் வியக்கிறேன். எனது தேவையில் உம்மை நாடுவதற்கும், பிறருடைய வாழ்வில் நீர் தொடர்ந்து தலையிட வேண்டுமென உம்மை நோக்கிக் கூக்குரலிடுவதற்கும் நான் ஒருபோதும் தயங்காதவாறு, என்னை நம்பிக்கையாலும் தாழ்ச்சியாலும் நிரப்பியருளும். ஆண்டவரே, விழித்தெழுந்து உமது மக்களைக் காப்பாற்றும்; ஏனெனில் உம்மின்றி நாங்கள் உண்மையாகவே அழிந்துபோவோம்! இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

படம்: இயேசு புயலை அமைதிப்படுத்துகிறார் – இயேசு சமூகத்தின் ஆண்டவரின் தோற்றமாற்ற ஆலயத்தின் மேல்நிலைச் சாளரச் சுவரில் சில்வெஸ்த்ரோ பிஸ்தொலேசி வரைந்த ஈரச்சாந்துச் சுவரோவியம், விக்கிமீடியா காமன்ஸ் வழியாக