தமிழ்

கத்தரிக்கப்படுதல்

மே 13, 2020
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம் புதன்கிழமை
இன்றைய வாசகங்கள்

பாத்திமா அன்னை—விருப்ப நினைவு

“உண்மையான திராட்சைச் செடி நானே; என் தந்தையே அதை வளர்ப்பவர். என்னில் கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் அகற்றிவிடுகிறார்; கனிகொடுக்கும் ஒவ்வொரு கொடியும் இன்னும் மிகுதியாகக் கனிகொடுக்கும்படி அதைக் கத்தரித்துச் சுத்தம் செய்கிறார்.”  யோவான் 15:1–2

நீங்கள் கத்தரிக்கப்படுவதற்கு உங்களை ஒப்படைக்க விரும்புகிறீர்களா?  ஒரு செடி நல்ல கனிகளையோ அழகிய மலர்களையோ மிகுதியாகத் தர வேண்டுமென்றால், அதைக் கத்தரிப்பது அவசியம்.  எடுத்துக்காட்டாக, ஒரு திராட்சைச் செடியைக் கத்தரிக்காமல் வளர விட்டுவிட்டால், அது பயனற்ற பல சிறிய திராட்சைப் பழங்களையே தரும்.  ஆனால், அந்தச் செடியைக் கவனமாகக் கத்தரித்தால், அது இயன்ற அளவு மிகுதியான நல்ல திராட்சைப் பழங்களைத் தரும்.

தமது இறையாட்சிக்காக நல்ல கனிகொடுப்பதைப் பற்றிய இதேபோன்ற பாடத்தை நமக்குக் கற்பிக்க இயேசு, கத்தரித்தல் என்னும் இந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார்.  நம் வாழ்வு கனிதர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்; உலகில் தமது அருளின் வல்லமையுள்ள கருவிகளாக நம்மைப் பயன்படுத்தவும் விரும்புகிறார்.  ஆனால், அவ்வப்போது ஆன்மிகக் கத்தரித்தல் வழியாகத் தூய்மைப்படுத்தப்பட நாம் விரும்பாவிட்டால், கடவுள் பயன்படுத்தக்கூடிய கருவிகளாக நாம் இருக்க மாட்டோம்.

நற்பண்புகள் முறையாக வளர்க்கப்படுவதற்காக, நம் வாழ்விலுள்ள தீய பழக்கங்களைக் கடவுள் அகற்ற அனுமதிப்பதே ஆன்மிகக் கத்தரித்தல் ஆகும்.  குறிப்பாக, அவர் நம்மைத் தாழ்த்தவும் நம் செருக்கை அகற்றவும் அனுமதிப்பதன் வழியாக இது நிகழ்கிறது.  இது வேதனை தரலாம்; ஆனால், கடவுளால் தாழ்த்தப்படுவதில் ஏற்படும் வேதனை ஆன்மிக வளர்ச்சிக்கு ஒரு திறவுகோலாகும்.  தாழ்ச்சியில் வளரும்போது, நம்மையும் நம் சொந்தக் கருத்துகளையும் திட்டங்களையும் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, நமக்கு ஊட்டமளிக்கும் ஊற்றையே நாம் மேலும் மேலும் சார்ந்திருக்கிறோம்.  கடவுள் நம்மைவிட அளவிட முடியாத அளவு ஞானமுள்ளவர். நமது ஊற்றாக அவரை நாடி இடைவிடாமல் திரும்பினால், நாம் இன்னும் மிகுந்த வலிமை பெற்றவர்களாகவும், நம் வழியாக அவர் மாபெரும் செயல்களைச் செய்ய அனுமதிக்க மேலும் ஆயத்தமானவர்களாகவும் இருப்போம்.  ஆனால், இதற்கும் அவர் நம்மைக் கத்தரிக்க நாம் அனுமதிக்க வேண்டும்.

ஆன்மிக முறையில் கத்தரிக்கப்படுவது என்பது, நம் சொந்த விருப்பத்தையும் கருத்துகளையும் நாம் முன்வந்து கைவிடுவதாகும்.  நம் வாழ்வை நாமே கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அதைத் தலைசிறந்த தோட்டக்காரரிடம் ஒப்படைப்பதாகும்.  நம்மீது வைக்கும் நம்பிக்கையைவிட மிக அதிகமான நம்பிக்கையை அவர்மீது வைப்பதாகும்.  இதற்கு, நாம் நமக்கே உண்மையாக இறத்தலும் உண்மையான தாழ்ச்சியும் தேவை. ஒரு கொடி திராட்சைச் செடியைச் சார்ந்திருப்பதைப் போல, நாம் முற்றிலும் கடவுளையே சார்ந்திருக்கிறோம் என்பதை இந்தத் தாழ்ச்சியால் ஏற்றுக்கொள்கிறோம்.  திராட்சைச் செடி இல்லாமல் நாம் வாடி இறந்துவிடுவோம்.  திராட்சைச் செடியோடு உறுதியாக இணைந்திருப்பதே வாழ்வுக்கான ஒரே வழி.

உங்கள் வாழ்வில் ஆண்டவருக்கு உரியதல்லாத அனைத்தையும் அவர் கத்தரித்து அகற்ற நீங்கள் அனுமதிக்கும்படி இன்று செபியுங்கள்.  அவர்மீதும் அவரது தெய்வீகத் திட்டத்தின்மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் வழியாகக் கடவுள் விளைவிக்க விரும்பும் நல்ல கனிகளைத் தருவதற்கு இதுவே ஒரே வழி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஆண்டவரே, என் செருக்கையும் தன்னலத்தையும் முற்றிலும் கத்தரித்து அகற்றுமாறு உம்மை வேண்டுகிறேன்.  எல்லாவற்றிலும் நான் உம்மை நாடித் திரும்பும்படி, என் பல பாவங்களிலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.  உம்மைச் சார்ந்திருக்க நான் கற்றுக்கொள்ளும்போது, என் வாழ்வில் நீர் நல்ல கனிகளை மிகுதியாக விளைவிக்கத் தொடங்குவீராக.  இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – பாத்திமா அன்னை

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

படம்: உண்மையான திராட்சைச் செடியாகிய கிறிஸ்து


இறைவனோடு ஒன்றிப்பை நோக்கிய இறையனுபவப் பயணம்:
புனித சிலுவை யோவான் வழங்கும் ஆன்மிக ஞானம்